சூ. 188 :

தாம்நாம் என்னும் மகர இறுதியும்

யாமென் இறுதியும் அதனோ ரன்ன

ஆஎவ் வாகும் யாமென் இறுதி

ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்

ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்

(16)
 
க-து:

தாம்    நாம்   யாம்   என்னும்  பெயர்கள்  உருபேற்குங்கால்
எய்தும் திரிபு கூறுகின்றது.
 

பொருள்: தாம்   நாம்   என்னும்  மகர  ஈற்றுப்  பெயரிறுதியும் யாம்
என்னும்    பெயரிறுதியும்   நும்    என்னும்    பெயர்போல உருபுவரின்
இயற்கையாகப்    புணரும்.   ஆண்டு   யாம் என்னும் பெயரின் ஆகாரம்
எகரமாகும். அவ்விடத்து யகரமெய்கெடும். ஏனைய    தாம்  நாம் என்னும்
இரண்டு சொற்களின் நெட்டெழுத்துக்கள் குறுகும்.
 

என்றது;   தாம்,  நாம்  என்பவை தம், நம் எனவும் யாம் என்பது எம்
எனவும் திரிந்து உருபேற்கும் என்றவாறு.
 

எ-டு:  தம்மை,  நம்மை,  எம்மை  எனவரும். ஏனைய உருபுகளொடும்
ஒட்டிக் கொள்க.