சூ. 189 :

எல்லாம் என்னும் இறுதி முன்னர்

வற்றென் சாரியை முற்றத் தோன்றும்

உம்மை நிலையும் இறுதி யான

(17)
 
க-து:

எல்லாம்   என்னும்    பொதுப்பெயர்   உருபேற்கும் முறைமை
கூறுகின்றது.
 

பொருள்: அஃறிணைப்   பொருள்பற்றி   வரும்  எல்லாம்  என்னும்
பொதுப் பெயர் இறுதி முன்னர்,உருபு வருங்கால் வற்று என்னும்   சாரியை
முழுமையாகத் தோன்றும். இறுதிக்கண் ஓர் உம்மை   உருபின்   பின்வந்து
நிலைபெறும்.
 

இவ்வும்மை    முற்றுப்   பொருட்டாய்   நிற்கும். மேல், ‘‘உயர்திணை
யாயின்   நம்இடைவரு’’ மென்பதனான் இஃது அஃறிணைப் பொருள் பற்றி
வருவது என்பது பெறப்படும்.
 

எ-டு: எல்லாவற்றையும், எல்லாவற்றொடும்,எல்லாவற்றிற்கும் எனவரும்.
வற்றொடு இன்சாரியை வருதல் மேற்கூறப்பட்டது.
 

எல்லாம்   என்பதன்  மகரத்தை  வற்றின்  மிசை ஒற்று எனக் கெடுக்க
என்பார் உரையாசிரியன்மார். அது நம்முச்சாரியை வருங்காலும் கெடுதலின்
மகரஇறுதி (சூ. 311) என்னும் பொது விதியாற் கெட்டது என்பதே நேரிதாம்.
 

இனி,   எல்லாவற்றொடும்   எல்லாவற்றுக்கும்  எனவரும்   ஒடுவும்
குவ்வுமாகிய  உருபுகளின்மேல்  உயிர் ஏறி முடியாவாகலின்   உருபுகளின்
முற்றுகரத்தை    ‘முற்ற’    என்னும்   மிகையாற்   கெடுக்க   என்பார்
உரையாசிரியன்மார். அது பொருந்தாது. என்னை? உருபுகள் தனித்துநின்று
பொருளுணர்த்துதற்கு      ஆற்றாத   இடைச்சொற்களாதலின்   அவை
பெயரொடு   கூடியவழி   ஒரு   சொல் நீர்மைத்தாய்  ஒற்றுமைப்பட்டுத்
தொடர்     மொழியிறுதியாய்    நிற்கும்.     அவ்விடத்து     அவை
குற்றியலுகரமேயாகலின்   உம்மையின்  உயிர்   அவற்றின்   மேல்  ஏறி
முடியுமென்க.   ஏனைய   விளக்கங்களை  எனது  குற்றியலுகர  ஆய்வுக்
கட்டுரையுட் கண்டு கொள்க.