‘‘கசடதபற’’ என்னும் இவை சாரியை ஊர்ந்து நிற்கும் மெய்யெழுத்து என அறிக. (வல்-வலிமை, திண்மை) இவ்ஆறனையும் பிறப்பிக்குமிடத்து வாயுறுப்புக்கள் நன்கு ஊன்றி நிற்க, அவற்றை நெஞ்சுவளியானது மிகவலிந்து வெளிப்படுக்கும். அதனான் அவ்வளியினது வன்மையை எழுத்தின் மேலேற்றிக் கூறுதல் மரபு என்பது தோன்ற ‘‘என்ப’’ என்றார். மற்றும் இவை ஏனை யெழுத்துக்களொடு மயங்கி வருங்கால் தம் வன்மை திரியுமாதலின் தனித்தும் இணைந்தும் வருமிடத்தே இவ்வன்மை தோன்றுமென அறிக. வளி காரணமாக இவை வன்கணம் எனப்படும். |