சூ. 191 :

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்

எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்

ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப

நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி

உம்மை நிலையும் இறுதி யான

தம்இடை வரூஉம் படர்க்கை மேன

நும்இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே

(19)
 
க-து:

எல்லாரும்,  எல்லீரும்  என்னும்  பெயர்கள் உருபு வருங்கால்
எய்தும் முறைமை கூறுகின்றது.
 

பொருள்: எல்லாரும்   என்னும்      உயர்திணைப்      படர்க்கைப்
பெயரிறுதியும்,    எல்லீரும்    என்னும் முன்னிலைப் பெயரிறுதியும் உருபு
வருங்கால் ஒற்றும் அதன் மேல் நிற்கும் உகரமும் கெடும் என்றும் கூறுவர்.
அங்ஙனம் கெட்டவிடத்து ரகரம் புள்ளியாக நிற்கும். அவ்வழிப் படர்க்கைச்
சொல்லிடத்துத்     தம்முச்சாரியையும்    முன்னிலைச்     சொல்லிடத்து
நும்முச்சாரியையும் இடையே வரும்.   உருபினது   இறுதிக்கண்   உம்மை நிலைபெறும்.
 

எ-டு: எல்லார்தம்மையும்   எல்லீர்நும்மையும்    எனவரும்.    ஏனை
உருபுகளொடும் ஒட்டி, முற்கூறிய விளக்கங்களொடு கண்டு கொள்க.
 

‘‘நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’’ என்ற மிகையான் ஏனை  ரகரஈற்றுப்
படர்க்கைப்பெயர்,    முன்னிலைப்   பெயர்களுள் ஒரு   சாரனவற்றிற்கும்
இச்சாரியையும் உம்மையும் வருதல் கொள்க.
 

எ-டு: கரியார்தம்மையும்,     சான்றோர்    தம்மையும்     எனவும்;
கரியீர்நும்மையும், சான்றீர்நும்மையும் எனவும் வரும். இன்னும்  இதனானே
அவர்தம்மை, இவர்தம்மை என உம்மையின்றிச் சாரியை    மட்டும்பெற்று
வருதலும் எல்லாரையும், எல்லீரையும் எனச்    சாரியை   இன்றி உம்மை
மட்டும் பெற்று வருதலும் கொள்க.
 

இனிச்    சிறுபான்மை   கரியேம்நம்மையும், இருவேம்தம்மையும் எனத்
தன்மைப்பன்மைப்பெயர்     நம்முச்சாரியையும்      உம்மையும்  பெற்று
வருதலையும் எல்லாம் என்பது எல்லேம் எனத்திரிந்து தன்மைப்  பெயராய்
வருதலையும் புறனடையாற் கொள்க.