சூ. 193 :

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்

அத்தும் இன்னும் உறழத் தோன்றல்

ஒத்த தென்ப உணரு மோரே

(21)
 
க-து:

அழன் புழன் என்னும் சொற்கள் உருபொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  அழன்  புழன்  என்னும்  அவ்இரண்டு  மொழிக்கும் உருபு
வருங்கால் அத்துச்சாரியையும்  இன்சாரியையும் உறழ்ந்து தோன்றுதல் மரபு
என்பார் அச்சொற்களின் நிலையை உணர்வோர்.
 

இவை  மகர  ஈற்றுச்  சொல்லாகத்  தோன்றி  னகர  ஈறாகத்  திரிந்து
வழங்குவன   என்பதை  உணர்த்த   ‘உணருமோர்’   என்றார்.  ‘ஒத்தது’
என்பதனை  “ஒத்தறிவான்  உயிர் வாழ்வான்” (குறள்-214) என்பது போலக்
கொள்க.
 

எ-டு:  அழத்தை,  அழனினை  எனவும்  புழத்தை, புழனினை எனவும்
வரும்.   ஏனைய   உருபுகளொடும்   ஒட்டிக்கொள்க.   அத்தே   வற்றே
(புணரியல்-31) என்பதனான்  நிலை  மொழியீறும்  அத்தினகரம் (புணரி-23)
என்பதனான்,   அத்தின்   அகரமும்   கெட்டன   என்க.    இன்னினும்
அத்துவருதல்-ஒத்ததாகலின் அதனை முற்கூறினார்.