சூ. 197 :

அவைதாம் 

இயற்கைய வாகும் செயற்கைய என்ப 

(25)
 

க-து:

ஒற்றுமிகத்    தோன்றும்    குற்றியலுகர  மொழிகள்  உருபொடு
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: மேலே   ஒற்றுமிகத்   தோன்றும்    அப்பால்   மொழிகள்
எனப்பட்டவைதாம்,  இயல்பாகப் புணரும் இலக்கணத்தை உடையன என்று
கூறுவர் புலவர். இயற்கை = இலக்கணம்; செயற்கை = செய்கை-செயற்பாடு.
 

எ- டு:  யாட்டை,   (யாடு + ஐ = யாட்டை)  யாட்டொடு,  சோற்றை -
சோற்றொடு;   (முருடு)   முருட்டை,   முருட்டொடு;  (முயிறு)  முயிற்றை,
முயிற்றொடு; (எருது) எருத்தை, எருத்தொடு எனவும் வரும்.
 

‘‘செயற்கைய’’ என்ற மிகையான் யாட்டிற்கு,  சோற்றிற்கு,  யாட்டின்கண்,
சோற்றின்கண் எனச் சாரியை பெற்றுவருதலும் கொள்க.