சூ. 199 : | ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் |
| எல்லா எண்ணும் சொல்லுங் காலை |
| ஆனிடை வரினும் மான மில்லை |
| அஃதென் கிளவி ஆவயின் கெடுமே |
| உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே |
(27) |
க-து: | எண்ணுப் பெயர் அடையடுத்து வரும் பஃதென்னும்சொல் உருபொடு புணரும் முறைமை கூறுகின்றது. |
பொருள்: ஒன்றுமுதலாக எட்டீறாக உள்ள எண்ணுப் பெயர்களைப் பத்து என்னும் சொல் தொடர்ந்து பண்புத்தொகையாக நிற்கும் எல்லா எண்ணுப் பெயர்களையும், உருபொடு புணர்த்துக் கூறுமிடத்து ஆன் என்னும் சாரியை இடையே வருதலும் குற்றமின்று. அச்சாரியை வருங்கால் பஃது (பத்து) என்னும் சொல்லிடத்துள்ள அஃது என்னும் சொற்பகுதி கெடும். பகர மெய்கெடாது நிற்கும். |
“நின்ற பத்தன் ஒற்றுக்கெட ஆய்தம் வந்துஇடை நிலையும்” (குற்-புண-32) என்றதனான் வந்த பஃதென்னும் சொல் திரிந்ததன் திரிபுஅது என்னும் நயத்தான் பத்தென நின்றது. உய்தல் = கெடுவதினின்று உய்தல். |
எ-டு: ஒருபஃது + ஆன் + ஐ = ஒருபானை என்றுவரும். ஏனையவும் இவ்வாறே இருபானை, முப்பானை, நாற்பானை, ஐம்பானை, அறுபானை, எழுபானை, எண்பானை எனவரும். ஒருபானொடு இருபானொடு என ஏனை உருபுகளொடும் ஒட்டுக. |
உம்மை எதிர்மறையாகலின் ஒருபஃதனை, இருபஃதனை என வருதலும் கொள்க. ‘‘உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே’’ என்றதனான் இறுதி ஒற்றுமைப்பட்டு நிற்கும் ஒன்பஃது என்பதற்கும் இவ்விதி கொள்க. எ- டு: ஒன்பானை, ஒன்பானொடு எனவரும். |