|
சூ. 2 : | அவைதாம் | | குற்றிய லிகரம் குற்றிய லுகரம் | | ஆய்தம் என்ற | | முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன | (2) | க - து: | மேலைச்சூத்திரத்துச் ‘சார்ந்துவரல் மரபின’ என்றவற்றை விரித்துப் பெயரும், முறையும், இயல்பும் கூறுகின்றது. ‘ஒருபுடைச்சேறல்’ என்னும் உத்தியான், அவைதாம் என்னும் கூன் ‘சார்ந்து வரல் மரபின‘ என்றதனைத் தழுவி நின்றது. | பொருள்:சார்ந்து வரல் மரபினையுடைய அவைதாம் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பால் ஒலிப்பியல்புடையதும் ஆகிய மூன்றும் மேற்கூறப்பெற்ற முப்பது எழுத்தொடு ஒருபுடையாக ஒத்த தன்மையன என்று கூறுவர் ஆசிரியர். | ‘என்ப’ என்றது அதிகார முறைமை என்னும் உத்தியான் கூட்டிக் கொள்ளப்பெற்றது. சார்பெழுத்துக்களின் பண்பு புலப்பட வேண்டி விரித்துக்கூறினார். பண்பாவது குன்றிநிற்கும் இயல்பும், முப்பாலாக ஒலிக்கும் இயல்புமாம். ‘புள்ளியும்’ என்னும் உம்மை எண்ணும்மை. புள்ளி என்பது ஒலிக்கும் இயல்பினைச் சுட்டி வரும் வரிவடிவ அடையாளம். முப்பாற்புள்ளியெனவே அதன் வரிவடிவும் முக்கோணமாக அமைத்துக் கொள்ளப் பெறுமென்க. |
‘ஓரன்ன’ என்றமையான் ஒருபுடை ஒப்புமையே கொள்க. அவையாவன, மொழிக்கு உறுப்பாதலும், மாத்திரை பெறுதலும், அசைக்கு உறுப்பாதலுமாம். | ஆய்தம் என்ற எழுத்து, நா அண்ணம் முதலாய உறுப்புற்றமையப் பிறவாமல், வாயிதழ் அங்காப்ப மிடற்றிசையான் அரை மாத்திரை யளவொடு பிறப்பதாகலின், அதுதான் சார்ந்து வரும் அஇஉ என்னும் குற்றுயிர் ஓசைகளின் சாயலைப் பெற்றொலிக்கும் என்க. (எகர ஒகரங்கள் இகர உகர ஒலியுள் அடங்கும்) ஆய்தம் உயிரேறலின்றி யாண்டும் ஒலிப்பொடு வரும் பண்பினது, என்பது விளங்க ஒலிக் குறிப்பினதாகிய புள்ளியை விதந்து ‘‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’’ என்று கூறினார். ஏனைய இரண்டின் இயல்புகளைப் பின்னர் மெய்யெழுத்துக்களோடு மாட்டெறிந்து கூறுவார். | ஆய்தம் யாண்டும் ஒலிப்பொடுநிற்றலான், இதனை உயிர் ஊர்வதில்லை. அரைமாத்திரையளவினதாகலின் அது மெய்யினை ஊர்வதில்லை. இங்ஙனம் உயிருக்கும் ஒற்றிற்கும் இடைப்பட்டு நிற்றலின், உயிர்போலவும் ஒற்றுப் போலவும் முறையே அலகு பெற்றும் பெறாதும் வருமென அறிக. | எ-டு : மியா, (கேண்மியா) நாகு, (நாகரிது) எனவரும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புணர்மொழியிடத்துப்புள்ளி அடையாளம் பெறும். குற்றியலுகரம் உயிரொடுபுணரின் தன் வடிவை இழக்கும். ஆய்தம் அஃது-இஃது-உஃது எனவும் எஃகம், பஃறி, கஃசு, அஃறிணை, பஃறலை எனவும் வரும். (சார்பெழுத்துக்களைப் பற்றிய பிறவிளக்கங்களை எனது சார்பெழுத்து ஆராய்ச்சிக்கட்டுரையுட் காண்க.) |
|