ஒருமையீற்றுக் குற்றுகர வினாப்பெயர், சுட்டுப்பெயர்கள் உருபொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்: யாது என்னும் வினாப்பெயரின் இறுதியும், சுட்டெழுத்துக்களை முதலாக உடைய ஆய்தத் தொடர் மொழிக் குற்றுகர இறுதியும் அன் சாரியையொடு பொருந்தும்; அவ்வழிச் சுட்டுப் பெயரின் இடைநின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்.
ஆய்தத் ‘தொடர்மொழி’ இறுதி என்பதும் கெடுதல் ‘வேண்டும்’ என்பதும் குறைந்து நின்றன.
எ-டு: யாதனை, யாதனொடு எனவும், அதனை, அதனொடு; இதனை, இதனொடு; உதனை, உதனொடு எனவும் வரும். ஏனைய உருபொடும் கூட்டிக் கொள்க.