சூ. 201 :

ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் 

சாரியைக் கிளவி இயற்கையு மாகும் 

ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே

(29)
 
க-து :திசைப்   பெயர்கள் ஏழனுருபொடு    புணருங்கால்   எய்தும்
முறைமை கூறுகின்றது.
 

பொருள்: திசைப்   பெயரின்   முன்வரும்  ஏழனுருபிற்கு மேற்கூறிய
இன்சாரியை வாராமல்  இயல்பாயும்  புணர்தலாகும்.   அவ்வழித்  திசைப்
பெயரின் இறுதி நின்ற குற்றியலுகரம் தான்  ஊர்ந்து  நின்ற  மெய்யொடும்
கெடும்.
 

‘ஆவயின்’ என்றது சாரியை வாராமல் இயற்கையாயவிடத்து என்றவாறு.
 

எ-டு: வடக்கண்,   தெற்கண்,    கிழக்கண்,    குடக்கண்   எனவரும்.
குணக்கண்,  மேற்கண்  எனலும்   ஆம்.   உம்மை   எதிர்மறையாகலான்,
வடக்கின்கண், கிழக்கின்கண் எனவருதலே பெரும்பான்மை என்று கொள்க.