7. உயிர் மயங்கியல
 

“உயிரிறு   சொன்முன்   உயிர்வரு   வழியும்”    (புணரி-5)   எனப்
புணரியலுள் தோற்றுவாய் செய்த முறைமையான்  நிலைமொழி   உயிரீறாக
நின்று நாற்கணத்தொடும் புணரும் இலக்கணம் உணர்த்தலின்  இவ்வோத்து
உயிர் மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று.
 

உயிரீறும் புள்ளியீறும் நாற்கணங்களொடு புணருங்கால்  மெய்பிறிதாதல்
மிகுதல்  குன்றல்  என்னும்  திரிபுகளை  ஏற்றுப்  பொருள்  வேறுபடாமல
இசையும்  ஒலியும்   வேறுபட்டுக்  காந்தமும்  எஃகும்  இணைந்தாற்போல
மயங்கி  நிற்றலான்   புணரியல்  என்னாது  மயங்கியல்  என்றார்.  உருபு
புணர்நிலை கூறி இதனான் பொருட்புணர்ச்சி கூறலின் இஃது உருபியலொடு
இயைபுடைத்தாயிற்று.
 

வேற்றுமைப்புணர்ச்சி   அல்வழிப்புணர்ச்சி    என்னும்   இரண்டனுள்
வேற்றுமை   உருபு  தொக   அப்பொருள்படப்   புணரும்  புணர்ச்சியும்,
உருபுகள்  பெயரொடு   ஒட்டி    ஒருசொல்லாய்    நின்று   குறித்துவரு
கிளவியொடு  புணரும்   புணர்ச்சியும்  வேற்றுமைப்புணர்ச்சி  எனப்படும்.
அல்லாதவை அல்வழிப்புணர்ச்சி எனப்படும்.
 

விதந்து கூறற்குரியவை தவிர்ந்த  ஏனைய  உயிர்  முதன்மொழிகளொடு
உயிரீறு   புணரும்    புணர்ச்சி    இலக்கணம்     புணரியலுள் (சூ. 38)
கூறப்பட்டமையான்   உயிரீறு   நின்று    மெய்ம்முதன்   மொழிகளொடு
புணருமியல்பினை   முதற்கண்    கூறத்தொடங்குகின்றார்.   மெய்ம்முதல்
என்றது உயிர்மெய்யெழுத்தினை என்பது மேற்கூறப்பட்டது.
 

சூ. 203 :

அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் 

வேற்றுமை அல்வழிக் கசதபத் தோன்றின் 

தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே 

(1)
 
க - து:அகர ஈற்றுச் சொற்கள் அல்வழிக்கண் வன்கணத்தொடு புணரும்
இலக்கணங் கூறுகின்றது.
 

பொருள்: அகரத்தை   இறுதியாக   உடைய பெயர் நிலைமைத்தாகிய
சொற்களின் முன்னர் வேற்றுமையல்லாத  வழிக்   கசதபக்களை   முதலாக
உடைய சொற்கள் வருமொழியாகத் தோன்றின்   தத்தமக்கு   ஒத்த  ஒற்று
இடையே மிக்குப்புணரும்.
 

மிகுவது    ஒலி   என்பது   விளங்க   ‘ஒற்றிடைமிகுமே’   என்றார்.
இவ்வதிகாரம்   முடியக்கூறும்     மிகுதல்,     மெய்பிறிதாதல்,   குன்றல்
என்பவை  ஒலிஎழுத்தைப்   பற்றியவையே   என்பதும்   வரிவடிவின்கண்
அவ்வேறுபாடு   தோன்ற   எழுதிக்   கொள்ளப்பெறும்  என்பதும் மேல்
உணர்த்தப் பெற்றன.
 

எ-டு: விளக்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும்.
 

இடைச்சொல்லும் உரிச்சொல்லும்  பெயர்ப்பொருட்டாயும்  பெயர்களைச்
சார்ந்தும்   வருமிடத்து   அவை   பெயராகக்  கொள்ளப்படும்  என்பார்
பெயர்என்னாது பெயர்நிலைக்கிளவி  என்றார்.  அந்நெறியானே  தடக்கை,
வயக்களிறு என உரிச்சொற்கள் பெயர்நிலைக் கிளவியாய் நின்றுபுணர்ந்தன.
மெலிமிகுந்த  கமஞ்சூல்,   தடஞ்செவி  என்பன   ஓசைகருதிய  செய்யுள்
விகாரமாம்.  அன்றிப்  புறனடையாற்  கொள்ளலுமாம்.  இனி, வரிவடிவைச்
சுட்டிக்  கூறுமிடத்து  அ+குறிது=அக்குறிது,  அப்பெரிது   எனத்  தன்னை
உணர்த்தி நின்ற வழிப் பெயர்நிலைமை எய்திற்றாகலின் எழுத்தும் இவ்விதி
பெற்றதென்க. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.