சூ. 204 : | வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் |
| எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும் |
| ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் |
| ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே |
(2) |
க-து : | அகர ஈற்றுள் ஒருசார் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. இடைச்சொற்கள் தத்தம் பொருளவாயும், பெயர்வினைகளைச் சார்ந்தும் பெயரும் தொழிலுமாக ஆக்கமுற்று நின்று புணரும் என்பது இதனானும் பெறப்படும். |
பொருள் : அகர ஈற்று வினையெச்சச் சொல்லும், அகர ஈற்று உவம உருபிடைச் சொல்லும், என என்னும் சொல்லும், அகரச் சுட்டாகிய இறுதியும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் நின்று புணருங்கால் கசதபக்கள் வரின் மிகும். |
எ- டு: உணக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும், தவக்கொண்டான், தவப்பெரியன் எனவும் புலிபோலப் பாய்ந்தான் எனவும் சொல்லெனச் சொன்னான் எனவும் அக்கொற்றன் எனவும் ஆங்கக் கொண்டான் எனவும் வரும். பொருந்தும் சொற்கொணர்ந்து ஏனைய எழுத்துக்களொடும் ஒட்டிக்கண்டு கொள்க. ‘‘சுட்டின் இறுதி’’ என்பதன்கண் ‘‘இன்’’ உயிர்வழி வந்த சாரியையாம். |