பொருள்:யரலவழள என்னும் ஆறனையும் இடையெழுத்து எனக்கூறுவர் புலவர்.
இவை ஆறனையும் பிறப்பிக்கும் வாயுறுப்புக்கள் நன்கு ஊன்றாமல் நலிந்துநிற்க, மிடற்று வளியிசை இவற்றை ஏந்தி வெளிப்படுத்தலின் இடையெழுத்தெனப்பெற்றன. இவை இடைக்கணம் எனப்படும்.
அஃதாவது ஏனைய மெய்களைப்போல முழுதுந்தடையுறாமல் உயிர்ப்புச் சிறிது வெளிப்பட இடைவெளியுற்று நிற்றலின் ஒலிப்பு முறைமையான் இடையெழுத்தெனப் பெற்றன என்க.
அதனான் உரசொலியல்லாத யகரமும் வகரமும் அரை உயிராய்க் குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகரத்திற்கும் அடியாக நிற்குமென்க.