சூ. 211 :

வாழிய என்னும் செய்கென் கிளவி

இறுதி யகரம் கெடுதலும் உரித்தே 

(9)
 

‘‘சேயென்கிளவி’’ என்பது  இளம்பூரணர்  பாடம்.   ‘‘செயவென்கிளவி’’
என்பது   நச்சினார்க்கினியர்   பாடம்.   ‘‘செய்யென்   கிளவி’’   என்பது
தெய்வச்சிலையார் பாடம். இவை யாவும் ஒவ்வாமை பின்னர் விளக்கப்படும்.
 

க - து:

ஏவல்  கண்ணாத  வியங்கோட்கிளவிகளுள்   ஒன்றற்குத்  திரிபு
கூறுகின்றது.
 

பொருள்: வாழ்க  எனப்  பொருள்படும்  ‘வாழிய’ என்று கூறப்படும்.
‘‘செய்க’’ என்னும் வாய்பாட்டு வியங்கோட்கிளவியின் இறுதி   நிற்கும் யகர
உயிர்மெய்  கெடுதலும்   உரித்தாகும்.  உம்மையாற்   கெடாது   நிற்றலும் உரித்தென்க.
 

எ. டு: வாழி   கொற்றா,  சாத்தா,  தேவா,  பூதா  எனவரும். வாழிய
கொற்றா   எனவும்   வரும்.   இஃது   நிலைமொழிச்   செய்கையாதலின்
இறுதிகெடுதல் இயல்புகணம் வரினும் கொள்க. வாழிஞெள்ளா, நாகா, மாடா,
வளவா, அழகா எனவரும்.
 

பாடவிளக்கம் : வியங்கோள்வினைமுற்று வருக, செல்க, உண்க,  எய்க,
ஓர்க எனச்  ‘செய்க’ என்னும்   வாய்பாட்டினான்   வரும்.   வியங்கோள்
வினையின்ஈறு ககரஉயிர்மெய்  என்பதனைச்   சான்றோர்   செய்யுளானும்
ஆசிரியர் உடம்பொடு புணர்த்துக் கூறலானும் அறியலாம்.
 

வாழ்க, மன்னுக, காண்க  என்றாற்  போலவரும்   ஒருசார்   சொற்கள்
ஈறுதிரிந்து வாழிய, மன்னிய,   காணிய   எனவும்  வரும். வரினும் அவை
‘‘செய்யிய” என்னும்  வினையெச்ச  வாய்பாட்டுப்  பொருளைத்  தாராமல்,
“செய்க’’ என்னும் முற்றுவினைப் பொருள்  தந்து   நிற்றலின்,   அத்திரிபு
விளங்க   ஆசிரியர்   ‘வாழிய’   என்னும்  சொல்  ‘‘செய்யிய’’  என்னும்
வாய்பாடுபோல நிற்பினும் அஃது   ‘செய்க’  என்னும்  முற்று வாய்பாட்டுப்
பொருளுடையதாகும் என   உணர்த்துவாராய்  ‘வாழிய என்னும் செய்கஎன்
கிளவி’   என  விதந்து   கூறினார்.   செய்க   என்பது,   வருகென்றான்,
செல்கென்றான்  என்றாற்   போல ஈற்றகரம்  தொக்கு, என் என்பதனொடு
புணர்ந்து  ‘‘செய்கென்கிளவி’’   என நின்றது. வாழ்க என்னும் வியங்கோட்
கிளவி   வாழிய   எனத்திரிந்து  நிற்றலேயன்றி  ஈறுகெட்டு வாழி எனவும்
நிற்றலை நோக்கி இவ்விதி கூறினார் என்க.
 

செயவென்  கிளவி  என்பது ஏடெழுதினோரால் நேர்ந்த பிழையென்பது
காணாராய் உரையாசிரியன்மார் ஒவ்வா உரை பகர்ந்து சென்றனர்.  இக்கால
ஆய்வாளரும்  இதனைப்  பிழை  என ஓராராய், வர, செய, காண என்றாற்
போல வரும் செயவெனெச்சங்களை வியங்கோட்பொருள்  உணர்த்தும் என
வலிந்து கொள்வர்.  ககர  ஈற்றானன்றி அவை  வியங்கோட்  பொருளைத்
தாராமை ஓர்ந்துணரப்படும். நட, அள  என்றாற்  போல்வன  முதனிலைத்
தொழிற்பெயர். அவை  எடுத்தலோசையான் ஏவல்கண்ணிய வியங்கோளாக
வரும். தெய்வச்சிலையார் செய்என்கிளவி எனப்பாடங் கொண்டு (வினை-29)
ஓதுவதனான்   செயவென்பது வியங்கோட் பொருள் பயவாதென்பது அவர்
துணிபென்பது பெறப்படும்.