சூ. 214 :

தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்

லகரம் றகரஒற் றாதலும் உரித்தே

(12)
 

க-து:

லகர  உயிர் மெய்யீற்றுப்  பன்மைப்  பெயர்க்குரியதொரு விதி
கூறுகின்றது.
 

பொருள் : மூன்றெழுத்து  முதலாகத் தொடரும் தொடர் மொழியல்லாத
ஈரெழுத் தொருமொழிகளாகிய   லகர   ஈற்றுச்  சொற்கள் தம்மொடு தாம்
வந்து புணருங்கால் லகர உயிர்மெய் றகரப் புள்ளியாதலும் உரித்தாம்.
 

றகர    ஒற்றாதல்    என்றதனான்   லகரம்    உயிர்மெய்   என்பது
பெறப்படும். இதனானும் உயிர்மெய்யை ஆசிரியர்  ஓரெழுத்தாக  வைத்துக்
கூறும் முறைமை புலப்படும். உம்மை எதிர்மறை.
 

லகரம்  என்றும்  தொடரல்லிறுதி   என்றும்   கூறியதனான்  குறிக்கப்
பெற்றவை, பலசில என்பது பெறப்படும்.
 

எ. டு: பற்பல-சிற்சில   எனவரும்.  உயிர்மெய்   புள்ளி   மெய்யாகத்
திரிதலின் லகரம் றகரமாகும் என்னாமல் றகர ஒற்றாதலும்  என  விளங்கக்
கூறினார்.