சூ. 218 :மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை
(16)
 

க - து :

மக என்னும் சொல்லிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்: மக   என்னும்   பெயராகிய   அகர   ஈற்றுச்  சொல்லிற்கு
இன்சாரியை இடையே வரும்.
 

எ. டு: மகவின்கை - செவி,  தலை, புறம்  எனவரும். இது வருமொழி
வரையாது நிலைமொழிச் செய்கை  கூறினமையின்  ஏனைக்  கணம்வரினும்
சாரியைப்பேறு கொள்க.
 

எ. டு: மகவின் ஞாண்,  நூல்,  மணி, யாழ்,  வட்டு, அணி எனவரும்.
 

அடுத்துவரும் நூற்பாவின்கண் உள்ள ‘அவண்’  என்பதை  மிகையாகக்
கொண்டு சாரியை பெற்ற வழி இயைபு  வல்லெழுத்து   வீழ்க்க   என்பார்
உரையாசிரியன்மார். அகர ஈறாக  நின்றவழி  வல்லெழுத்துமிகும்  என்பது
விதி. நிலைமொழி, சாரியை பெற்று ஒரு சொல்லாய் நிற்றற்கண் அது னகர
ஈறாவதன்றி அகர  ஈறாகாது.   அவ்வழிப்  புணரியலுள்   இன்சாரியைக்கு
விதித்த  விதி  பெறுதலே  முறைமை என்பதை  ஓராமல்  நிலைமொழியும்
வருமொழியும்  மகக்கை,   மகச்செவி  எனமுன்னரே  புணர்ந்து  கிடந்தன
போலக்  கருதிக்கொண்டு  இயைபு  வல்லெழுத்து  வீழ்க்க  எனக் கூறுதல்
மொழியியலுக்கும் இந்நூல் நெறிக்கும் ஒவ்வாத கோட்பாடாகும்.
 

அங்ஙனமாயின் ‘நீயென்  ஒருபெயர்  நெடுமுதல்   குறுகும்  ஆவயின்
வல்லெழுத்  தியற்கை  யாகும்’   (உயிர்-51)    எனவும்   ‘சுட்டுமுதலிறுதி
உருபியல் நிலையும் ஒற்றிடை  மிகாஅ  வல்லெழுத்  தியற்கை’  (உயிர்-61)
எனவும் ‘உருபியல்  நிலையும்  மொழியுமா ருளவே ஆவயின்  வல்லெழுத்
தியற்கை யாகும்’   (உயிர்-92)     எனவும்     வல்லெழுத்தைச்    சுட்டி
விலக்கியமைக்குக் காரணம் என்னையெனின்?
 

நீ என்னும் பெயரை உருபிலக்கணத்தொடு மாட்டெறிந்தமையான், உருபு
புணருங்கால், “வல்லெழுத்து  முதலிய   வேற்றுமை  உருபிற்கு   ஒல்வழி
ஒற்றிடை  மிகுதல்   வேண்டும்”   (புண-12)  என்னும்  விதிப்படி  வரும்
வல்லெழுத்து  மிகும்   என்றதனைக்   கருதியும்,   உகரஈற்றுச்  சொற்கள்
கடுக்குறை,     கடுவின்குறை;     உடுக்குறை,    உடுவின்குறை     என
வல்லெழுத்துமிக்கும்,   வல்லெழுத்தின்றிச்     சாரியைபெற்றும்    வரும்.
சுட்டுப்பெயர்கள்  சாரியை  பெற்று  வருதலன்றி  அதுக்கோடு-இதுக்கோடு
என வல்லெழுத்துமிக்கு வாரா என்பதை உணர்த்த இருநிலைகளுள் ஒன்றை
விலக்க வேண்டியும்  “வல்லெழுத்  தியற்கை;  ஒற்று   இடைமிகா”  எனக்
கூறப்பட்டன என்க.
 

இனிக், கோ என்னும் சொல் “வேற்றுமைக்  கண்ணும்  அதனோ ரற்றே
ஒகரம்   வருதல்  ஆவயி னான”    (உயிர்-90)    என்னும்   சூத்திரத்து
வல்லெழுத்தொடு   ஒகரமும்    தோன்றி   நிற்கும்   என்றதனான்  ஒன்
சாரியையொடு   வல்லெழுத்தும்     நிற்குங்கொல்    என்னும்     ஐயந்
தோன்றுமாகலின் அவ்  ஐயம் நீங்க   ஆவயின்   வல்லெழுத்   தியற்கை
யாகும் எனப்பட்டதென்க.
 

அற்றாயின்,    ‘‘பலவற்றிறுதி    உருபியல்    நிலையும்’’,  ‘‘சுட்டுமுத
லிறுதி  உருபியல்  நிலையும்’’  என்னுமிடங்களில்  அதிகார  வல்லெழுத்து
மிக்க தன்றோ எனின்?  அன்று.  அவை,  “அத்தே  வற்றே”  (புணரி-31)
என்னும்  சூத்திரத்து  “அவற்றுமுன்   வரூஉம்   வல்லெழுத்து  மிகுமே’’
எனச்சாரியைக்கு  ஓதிய  விதிப்படி  மிக்கன  என்க.  சாரியை  பெற்றவழி
அதிகார வல்லெழுத்துக் கெடாது என்பது  ஆசிரியர்  கருத்தாயின்  ‘‘ஆடூ
மகடூ ஆயிரு பெயர்க்கும், இன்னிடை வரினும் மான  மில்லை’’  (உயிர்-69)
‘‘பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்’’  (உயிர்-77) ஏழென்கிளவி உருபியல்
நிலையும் (புள்ளி-93)  எனவருமிடத்தெல்லாம்  வல்லெழுத்தியல்பாகும் என
ஓதியிருப்பார் என்க.