சூ. 222 :

 செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் 

அவ்வியல் திரியா தென்மனார் புலவர்

(20)
 

க - து:

ஆகார  ஈற்று  வினையெச்சச்சொல்  ஒன்று   மேற்கூறிய  விதி
பெறும் என்கின்றது.
 

பொருள்: ‘செய்யா’   என்னும்   வாய்பாட்டு வினையெச்சச் சொல்லும்
மேற்கூறிய ஆகார ஈற்றுப்பெயர் போலக் கசதபக்கள்  வரின்  மிக்குமுடியும்
என்று கூறுவர் புலவர்.
 

எ. டு: உண்ணாக்   கொண்டான்,   சென்றான்,  தந்தான், போயினான்
எனவரும்.  உண்டு   கொண்டான்   என்பது  பொருள்.  இச்சூத்திரத்தாற்
‘‘செய்யா’’ என்னும் வினையெச்ச   வாய்பாடு   ஒன்று   உண்டு என்பதை
உடம்பொடு புணர்த்தலான் கொள்ள வைத்தார்.
 

இனி, உரையிற் கோடல் என்னும் உத்தியான்  அறியாப் பொருள்வயின்
எனவும் வினைவேறுபடாப்  பலபொருள்  ஒருசொல்  எனவும்  உண்ணாக்
கொற்றன், வாராக் கொற்றன் எனவும் எதிர்மறைப்  பெயரெச்சம் ஈறுகெட்டு
மிக்கு வருதலை அடக்கிக் கொள்க.