சூ. 223 :

உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி 

மெய்ம்மை யாக அகரம் மிகுமே

(21)
 

க - து:

உம்மைத்தொகை  மொழி  ஒன்றற்குச்  சிறப்புவிதி  கூறுகின்றது.
 

பொருள : ஆகார  ஈறாய்  நின்று  உம்மைப் பொருள்படத் தொக்குப்
புணரும் இருசொற்றொகை மொழிகளின் இடையே பொருண்மை உடையதாக
ஓர் அகரம் தோன்றி முடியும்.
 

பொருண்மையாவது தொக்குநின்ற  உம்மையினது  பொருளாம்.  மிகும்
என்றது தோன்றும் என்னும் பொருட்டாய் நின்றது.
 

எ. டு:  உவாஅப்பதினான்கு,      இரா    அப்பகல்    எனவரும்.
 

இவற்றின்கண்   அகரம்   தோன்றாதாயின்   பதினான்கு   உவாக்கள்
என்றும் இரவானது பகல், இல்லாதபகல் என்றும் கவர்பொருள் படுமென்க.
நிலைமொழிச்   செய்தியாகத்   தோன்றிய  அகரம்,   விதியீறாக  நிற்கப்
பொதுவிதியான்வல்லெழுத்துமிக்கதென்றறிக.
 

இனி ‘‘மெய்ம்மையாக’’   என்னும்   விதப்பான்,   ஏனைய   தொகை
மொழிகளுள்   அராஅப்பாம்பு   என்னும்   இருபெயரொட்டுப்   பண்புத்
தொகைக்கண்ணும்,  அராஅக்குட்டி   என்னும்   வேற்றுமைத்   தொகைக்
கண்ணும்   இராஅக்கொடிது   என்னும்   எழுவாய்த்   தொடர்க்கண்ணும்
இராஅக்காக்கை   என்னும்   ஈறுகெட்ட   எதிர்மறைப்   பெயரெச்சத்தின்
கண்ணும்   இறாஅவழுதுணங்காய்   என  இயல்புகணம்  வருதற்கண்ணும்
சிறுபான்மை அகரந்தோன்றுதல் கொள்க.
 

பண்புத்தொகையும்  வினைத்தொகையுமே   பிரித்துப்   புணர்க்கப்படா
என்பது விதியாகலின், ஏனைத்தொகைகளைப் பிரித்துணருமாறு  கூறுவாராய்
ஈண்டு உம்மைத்தொகை புணர்ந்து நிற்கும் மரபு கூறினார் என அறிக.