சூ. 228 :

நிலாவென் கிளவி அத்தொடு சிவணும் 

(26)
 
க - து :

நிலா  என்னும்   சொல்லுக்குப்   பிறிதொரு  விதி கூறுகின்றது.
 

பொருள்:   திங்களை   உணர்த்தும்     நிலா     என்னும்   சொல்
அத்துச்சாரியையொடு பொருந்தி வரும்.
 

எ. டு: நிலாஅத்துக்கொண்டான்,   சென்றான்,  தந்தான்,  போயினான்
எனவரும்.     நிலாஅத்து   நின்றான்,   வந்தான்,    இருந்தான்    என
இயல்புகணத்தொடும் ஒட்டிக் கொள்க.
 

‘சிவணும்’  என்றதனான்  சிவணாதவழி நிலாஅக்கதிர் என வன்கணத்து
அகரமும்  வல்லெழுத்தும்,  நிலாஅமுற்றம்  என அகரமும் பொதுவிதியாற்
பெறும் எனக் கொள்க.
 

இச்சூத்திரபாடம்  ‘‘அத்தொடுஞ்சிவணும்’’   என்றிருத்தல்   வேண்டும்.
அவ்வழி மிகையாற் கொள்ளப் பெற்றவை சூத்திரத்தானே அடங்குமென்க.