சூ. 231 : | மாமரக் கிளவியும் ஆவும் மாவும் |
| ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன |
| அகரம் வல்லெழுத் தவையவண் நிலையா |
| னகரம் ஒற்றும் ஆவும் மாவும் |
(29) |
க - து: | ஆகார ஈற்று ஓரெழுத்தொருமொழி மூன்றற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்: மா என்னும் மரத்தை உணர்த்தும் பெயரும் ஆ, மா என்னும் விலங்கை உணர்த்தும் பெயர்களுமாகிய அம்மூன்று பெயரும் மேற்கூறிய யாமரக்கிளவி முதலியவற்றொடு ஒத்ததொரு தன்மையவாகும். எனினும் அவற்றிற்கு ஓதப்பெற்ற அகரந் தோன்றுதல் வல்லெழுத்து மிகுதலாகியவை அவ்விடத்து நிலைபெறா. (மெல்லெழுத்து மட்டுமே மிகும்) அவற்றுள் ஆவும் மாவும் ஆகிய விலங்குப் பெயர்கள் னகர ஒற்றுப் பெற்று நிற்கும். |
எ. டு: மாங்கொம்பு, செறும்பு, தளிர், பூ எனவும் ஆன்கோடு; மான்கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும். |
‘‘மாமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே ஆவும் மாவும் னகரம் ஒற்றும்’’ எனச் சுருங்கக்கூறாது இங்ஙனம் கூறியது ‘‘ஞாபகங்கூறல்’’ என்னும் உத்தியாம். அதனான் மாமரக்கிளவி சிறுபான்மை மாஅங்கோடு, மாஅம்பழம் என அகரம் பெறுதலும் காயாங்கோடு, நணாங்கோடு என ஈரெழுத்தொரு மொழிகளுள் சில மெல்லெழுத்துப் பெறுதலும், ‘‘ஆபெயர்த்துத் தருதலும்’’ (புறத்திணையியல்-5) என னகரம் ஒற்றாது வருதலும் பிறவும் வேறுபட வருவனவும் அமைத்துக் கொள்க. |