சூ. 233 :

ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் 

தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே

(31)
 
க - து:

ஆ என்னும்   சொல் பவ்வீ என்னும்   இடக்கர்ச்சொல்லொடு
புணரும் மரபு கூறுகின்றது.
 

பொருள்: னகரம் ஒற்றும்   ஆ     என்னும்   சொல்லின்முன்வரும்
ஈகாரத்தை   ஊர்ந்த  பகரமாகிய  இடக்கர்ச்சொல்  தான் தன்  ஒற்றுமிகத்
தோன்றி நெடுமைகுறுகுதலும் உரித்தாகும்.
 

எ.டு: ஆப்பி-எனவரும்.  உம்மை எதிர்மறையாகலின் குறுகாது ஆப்பீ
எனவருதலும் ஆம்.
 

திரிந்ததன்  திரிபு  அது   என்னும்  நயத்தான்  ஆ என்னாது ‘ஆன்’
என்றார்.   அதிகார  மரபை   ஓராமல் உரையாளர் தோன்றி என்பதனான்
நிலைமொழி  னகரக்கேடு  கொள்க  என்பார்.  னகர   ஈறாயின்   புள்ளி
மயங்கியலுள்   ஓதுதலின்றி   ஈண்டைக்கு  ஏலாதென்க.   மேலும்  அவர்
உம்மையான்  ஆன்பீ   எனவும்   வருமென்பர்.  ஆண்டுத்   ‘தான்மிகத்
தோன்றி’ என்றதனான் மிக்க பகர ஒற்று நின்றுவற்றுதல் காண்க.