சூ. 235 :

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே 

(33)
 
க - து:

இகர  ஈற்று  அல்வழிப்   பொதுப்புணர்ச்சி   தொகைமரபினுள்
பெறப்படுதலின் ஈண்டு அவ்ஈற்று வேற்றுமை முடிபு கூறுவார்.
 

பொருள்: இகர ஈற்றுப்  பெயர்ச்சொல்லின்  முன்வரும்  வல்லெழுத்து
வேற்றுமைப் பொருண்மையுடையதாயின் மிக்குப்புணரும்.
 

எ. டு: கிளிக்கால்,  சிறை,  தலை,   புறம்  எனவரும்.   கோழிக்கால்,
சீற்றம், தாக்கு, போர் எனப் பிறசொற்களொடும் கூட்டுக.
 

இனிக் கிளிக்குறுமை,   கிளிகுறுமை  என   உறழ்ந்தும்  வருமென்பார்
உரையாசிரியர். கிளிகுறுமை என்பது  கிளி  குறுமையாக  உளது  என்னும்
பொருள்பட வந்ததாகக் கொள்வதன்றி வேற்றுமைப் பொருள் படவிரித்தற்கு
ஏலாதென்க.