சூ. 236 :

இனியணி என்னும் காலையும் இடனும்

வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன 

(34)
 
க - து:

சில  இகர   ஈற்றுச்  சொற்கள்    அல்வழிக்கண்     முன்னர்
வேற்றுமைக்கு    ஓதிய   முடிவு    பெற்று  வருமென்கின்றது.
வினையெஞ்சு    கிளவியை   உடன்    கூறினமையான்  இஃது
அல்வழி முடிபென்பது பெறப்படும்.
 

பொருள்: இனி-அணி     என்று     சொல்லப்படும்   காலத்தையும்
இடத்தையும் முறையே உணர்த்தும் சொற்களும்,  இகரஈற்று  வினையெச்சச்
சொல்லும்   இகரமாகிய     சுட்டிடைச்       சொல்லும்     மேற்கூறிய
அத்தன்மையனவாம். அஃதாவது வல்லெழுத்து மிகுமென்றவாறு.
 

எ. டு: இனிக்கொண்டான்,     சென்றான்,    தந்தான்,   போயினான்
எனவும், அணிக்கொண்டான், சென்றான், தந்தான்,   போயினான்  எனவும்,
தேடிக்கண்டான், சென்றான், தந்தான்,  பார்த்தான்  எனவும்   இக்கூத்தன்,
சாத்தன், திண்ணன், பாணன் எனவும் வரும்.
 

இச்சூத்திரத்துள்   வினை   ஒழிந்த   இடைச்சொல் மூன்றும் உருபின்
பொருள்பட வந்த வேற்றுமையாதலின்,  வேறோதி   முடித்தார்   என்பார்
நச்சினார்க்கினியர். அல்வழியும் வேற்றுமையும் ஒரு  சூத்திரத்துள்  ஒருங்கு
விதித்தல் இலக்கண மரபு அன்றென்பது மேலே விளக்கப்பட்டது.
 

இச்சூத்திரத்தான் அனி, உனி,   இணி,   உணி   என்னும்   சொற்கள்
‘இனி அணி’ என்பவற்றின்   இனமாக   வழங்கியிருத்தல் வேண்டும் எனத்
தெரிகின்றது.