சூ. 237 : | இன்றி என்னும் வினையெஞ் சிறுதி |
| நின்ற இகரம் உகர மாதல் |
| தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே |
(35) |
க - து: | இன்றி என்னும் வினையெச்சத்திற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : இன்றி எனப்படும் வினையெச்சத்தின் இறுதிநின்ற இகரம் உகரமாகத் திரிந்து வருதல் தொன்மையான இலக்கணப் பாங்கினான் செய்யுளுள் உரித்தாகும். |
திரிந்தவழி விதியீறாய்க் குற்றியலுகரமாக நிற்றலின் அவ்வீற்று விதிக்கொப்ப வல்லெழுத்துவரின் இயல்பாகப் புணருமென்க. (குற்-புண-20) |
எ. டு: உப்பின்றுபுற்கை உண்கமா கொற்கையோனே (இளம்பூரணம் மேற்கோள்-238) எனவரும். தன்னினம் முடித்தல் என்னும் உத்தியான், அன்றி என்னும் வினை எச்சச் சொல்லிற்கும் இவ்விதி கொள்க. |
எ. டு: வாளன்று பிடியா வன்கண் ஆடவர் (புறநானூறு-124.) எனவரும். ‘‘தொன்றியல் மருங்கின்’’ என்றதனான் இவ்விதி உலக வழக்கிற் கெய்தாதென்க. |