சூ. 238 :

சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே

(36)
 
க - து:

மேலே   இனியணி   என்னும்   சூத்திரத்து  வல்லெழுத்தொடு
புணருமாறு  கூறினமையின்  ஈண்டு   முற்கிளந்தற்று   என்றது
‘‘சுட்டின்  முன்னர்  ஞநமத்   தோன்றின்’’   என்பது  முதலாக
அகரச்சுட்டிற்கு (சூ. 205,   206, 207, 208)   ஓதியவற்றை  என
உணர்க.
 

பொருள்: இகர எழுத்தாகிய  சுட்டிடைச்சொல்   புணருமியல்பு  மேல்
இயல்புகணத்தொடு  புணரும்  அகரச்சுட்டிற்கு   ஓதிய   தன்மைத்தேயாம்
என்றது. மெல்லெழுத்துவரின் மிகுதலும் இடை   எழுத்தும்   உயிரெழுத்தும்
வரின் வகர ஒற்றுத் தோன்றுதலும் செய்யுட்கண் மாத்திரை நீண்டிசைத்தலும்
இதற்கும் ஒக்கும் என்றவாறு.
 

எ.டு: இஞ்ஞான்று,    இந்நூல்,    இம்மலர்    எனவும்    இவ்யாழ்,
இவ்விரல்,   இவ்வணி,   இவ்வாடை எனவும் ஈவயினான-ஈயிடை நின்றான்
எனவும் வரும். “ஈகாண்டோன்றும்” என்பது ஈன் என்னும் சுட்டுப் பெயரின்
ஈற்றழிவாகும். அதனைப் புறனடையாற் கொள்க. (ஈன்-இவ்விடம்)