சூ. 239 : | பதக்கு முன்வரினே தூணிக் கிளவி |
| முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே |
(37) |
க - து: | இகர ஈற்று அளவைப் பெயர் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. |
பொருள் : தூணி என்னும் சொல், தனக்கு முன்னர்ப் பதக்கு என்னும் சொல்வரின், முன்னர் வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கிளந்தோதிய இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். எடுத்தல் என்பது சொல்லுதல் என்னும் பொருட்டாய் நின்றது. |
எ. டு: தூணிப்பதக்கு எனவரும். வருமொழி தம்மகப்பட்ட அளவையாகாமையின் விதி வேறு ஓதப்பட்டதென்க. தூணித்தூணி எனத் தன்முன்னர்த் தான் வருமிடத்தும் வல்லெழுத்து மிகுதல் கொள்க. மற்றும் இதனானே இவ்வீற்று ஏனைய அளவுப்பெயர் தம்முன்தாம் வருங்கால் மிகுதலும் கொள்க. எ.டு தொடித்தொடி - காணிக்காணி எனவரும். |
உரையாசிரியன்மார் அடையடுத்துவரினும் பிறபொருட்பெயர் வரினும் இவ்விதி கொள்க என்பார். அடையெடுப்பினும் புணர்வது இகர ஈறேயாதலின் அதுவேண்டா கூறலாம். ஏனைய பொருட்பெயர்வரின் அது பொதுவிதியுள் அடங்குமாதலின் மிகையின்கண்படுத்தல் வேண்டாவாம். மேலும் அவர் தூணிக்குத்தூணி என இக்குச் சாரியை பெறுதலும் கொள்க என்பார். அது நாளுக்குநாள் என்றார் போலத் தொறுவென்னும் பொருள்பட நின்ற இடைச்சொல்லாகலின் சாரியை எனற்கேலாமையறிக. |