லள என்னும் இடையெழுத்தின் முன், யவ என்னும் இடையெழுத்து மயங்குமெனக் கூறுகின்றது.
பொருள்:மேற்கூறிய நான்கனுள் லள என்னும் இடையெழுத்துக்கள் புள்ளியாக நிற்க அவற்றின் முன் ய வ என்னும் (உயிர்) மெய்யெழுத்துக்களும் தொடர்ந்து மயங்குதற்குரியவாம்.
யகர வகரங்கள் தம் இனத்தொடு தொடர்தலின் ஒலிநிலை திரியாமல் மயங்கும். உம்மை இறந்தது தழுவிய எச்சஉம்மை.
எ-டு :வில்யாழ் - வெள்யானை - செல்வம் கள்வர் எனவரும். சொல்யாத்தான் - வில்வளைத்தான் எனப் புணர்மொழியுள்ளும் வரும். வில்யாழ், வெள்யானை என்பவை பண்புத்தொகை மொழி.
இவ்விரண்டு சூத்திரத்தானும் டறக்களின் முன்னர்க் கசப என்பனவும் லளக்களின் முன்னர்க் கசபயவ என்பனவும் தனிமொழி தொடர்மொழிக்கண் இணைந்து நிற்கும் என்பதும் உணர்த்தப்பட்டது.