சூ. 25 :

ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த்

தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே

(25)
 

க-து:

மெய்யெழுத்து  ஆறன் முன்னர் அவற்றிற்கொத்த  வல்லெழுத்து
ஆறும் மயங்குமென்கிறது.
 

பொருள்:ஙஞண  நமன   என்னும்     புள்ளியெழுத்துக்கள்   நிற்க
நெடுங்கணக்கினுள் அவ்வவற்றின்  மேலிடத்து  நிற்கும்  வல்லெழுத்துக்கள் நிரலேவந்து இவற்றின் ஓசையொடு மயங்குதற்குப் பொருந்துவனவேயாகும்.
 

நிலைஒத்தன  என  மாறுக.  நிலையாவது   மயங்கும்  நிலை.  இவை
மெல்லெழுத்தொடு தொடர்தலின் தம்வன்மை திரிந்து நிற்குமென்க.
 

எ-டு :பொங்கர்,  தஞ்சம்,  கொண்டல்,  பந்தர்,  ஆம்பல்,  மன்றல்
எனவரும். பெருங்குன்றம்,  வருஞ்சாத்தன்  எனப்   புணர்மொழியுள்ளும்
கண்டுகொள்க.