சூ. 250 : | நீஎன் பெயரும் இடக்கர்ப் பெயரும் |
| மீயென மரீஇய இடம்வரை கிளவியும் |
| ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் |
(48) |
க - து: | ஈகார ஈற்றுப் பெயர் மூன்றற்கு எய்தியது விலக்குகின்றது. |
பொருள்: நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயரும், பகர ஈகார மாகிய இடக்கர்ப் பெயரும், மீ என மருவி நிற்கும் இடத்தை வரைந்துணர்த்தும் சொல்லும், அல்வழியிடத்து வல்லெழுத்து வரின் இயல்பாகப் புணரும். மீ என்பது மேலாய பண்பையும் ஒன்றனது மேற்பகுதியையும் குறிக்கும் சொல்லின் மரூஉவாதலின் ‘‘மீஎன மரீஇய’’ என்றார். |
எ.டு: நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும் பீகுறிது, சிறிது, தீயது, புறத்தது எனவும் மீகண், செவி, தலை, புறம் எனவும் வரும். |
மீகண்-கண்ணின் மேற்பகுதியாகிய உறுப்பு. கண்மீ என்பது மீகண் என மாறிநின்று கண்ணின் ஒரு பகுதிக்குப் பெயராக நிற்றலின் அல்வழியாயிற்று. கண்ணினது மேலிடம் என விரித்தற்கேலாமை அறிக. |
இனி, மேலிடத்துக்கண் எனவிரித்து, வேற்றுமை முடிபு என்று கூறுவர் உரையாசிரியன்மார். ஆசிரியர் அல்வழியும் வேற்றுமையும் ஒருங்கு கூறாராகலின் அவர் கருத்துப் பொருந்தாதென்க. |