சூ. 251 :

இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் 

உடனிலை மொழியும் உளவென மொழிப 

(49)
 

க - து:

மேற்கூறிய மூன்றனுள் மீ  என்பதற்கு ஒருபுறனடை கூறுகின்றது.
 

பொருள்: இடத்தை   வரைந்துணர்த்தும்  சொல்லாகிய மீ  என்பதன்
முன் வல்லெழுத்து மிகும் உடனிலை  மொழிகளும்  உள  எனக்  கூறுவர்
புலவர். உடனிலை மொழிகள்  என்றது தொகைமொழிகளைப் போல ஒன்றி
நிற்கும் மொழிகளை.
 

எ. டு: மீக்கொடி-மீப்பல்   எனவரும்.    இவை   இருபெயரொட்டுப்
பண்புத்தொகையைப் போலக்  கொடியினது  மேற்பகுதியையும்   பல்லினது
மேற்பகுதியையும் உணர்த்தி ஒருசொல்  நீர்மைத்தாய்   நிற்குமாறு  கண்டு
கொள்க.
 

உம்மையை   வல்லெழுத்தென்பதனொடு  கூட்டி   மீங்குழி,  மீந்தோல்
எனச் சிறுபான்மை மெல்லெழுத்து மிகுதலும் கொள்க.