சூ. 258 :

அன்றுவரு காலை ஆவா குதலும்

ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் 

செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப 

(56)
 

க -து:

மேற்கூறிய  சுட்டுப்பெயர்    செய்யுள்    வழக்கிற்படும்  விதி
கூறுகின்றது.
 

பொருள்: உகரஈற்றுச்   சுட்டுப்பெயரின்   முன்னர்  அன்று  என்னும்
வினைக்குறிப்புச்சொல்   வருங்காலத்து    இறுதி    உகரம்  ஆகாரமாகத்
திரிதலும்,  ஐ   என்னும்  சாரியை   வருங்காலை   அவ்  உகரம்  தான்
ஊர்ந்து நிற்கும் மெய்யினைக் கெடாது நிறுத்தித்  தான்மட்டும்  கெடுதலும்,
செய்யுள்வழக்கிடத்து உரியதாகும் எனக் கூறுவர் புலவர்.
 

செய்யுள்  முடிபாதலான்  ஐகாரச்  சாரியை  புணருங்கால்  குற்றொற்று
இரட்டா   தென்க.   இவ்ஐகாரம்  சாரியை  என்பது  சுட்டுமுதல்  உகரம்
அன்னொடு  சிவணி  (உருபு-4)  என்றதனானும்   முன்னுயிர்  வருமிடத்து
ஆய்தப் புள்ளி (குற்-புண-18) என்றதனானும் உய்த்துணரப்படும்.
 

எ. டு:  அதாஅன்று    என்பது   வெண்பா யாப்பே.  இதாஅன்றம்ம,
உதாஅன்றம்ம  எனவும்  அதை  மற்றம்ம, இதை மற்றம்ம, உதை மற்றம்ம
எனவும் வரும்.
 

இனி நச்சினார்க்கினியர்,  ‘‘மொழிந்த  பொருளோடொன்ற  அவ்வயின்
முடியாததனையும்  முட்டின்று  முடித்தல்’’ என்னும்  உத்தியான்  அதன்று,
இதன்று, உதன்று என வருதலும் கொள்க என்பார். அவை அஃது,  இஃது,
உஃது  என்னும்  சுட்டுப் பெயர்களை  இலக்கணமுணராதார் ஆய்தமின்றி
வழங்கும்  இழி   வழக்காதலான்   அவற்றை   உத்தியான்   அமைத்தல்
தகவாகாதென்க.
 

இனி,   வேங்கடராசுலுரெட்டியாரவர்கள்   இந்நூற்பாவிற்கு   விளக்கங்
கூறுவாராய்   இச்சுட்டுப்    பெயர்கள்   மூலத்திராவிடத்தில்  மெய்யீறாய்
நின்றனவென்றும்-வடமலையாளத்தில் அத, இத,  உத என  அகர   ஈறாய்
உளவென்றும்   அவ்அகர   ஈற்றின்   முன்வரும்     அன்று   என்பது
மரஅடி-மராஅடி எனப்புணர்ந்து வருவது போல வந்தன என்றும் கூறுவார்.
 

தமிழையே ஒரு காரணத்திற்காகத்   திராவிடம்   என்னும்   பெயரால்
மொழி நூலார் வழங்குகின்றனர்  என்பதை  ஒவ்வாதவர்  அவர்; ஆதலின்
மூலத்திராவிடம் என்பதொன்றை வற்புறுத்தியும் சங்க இலக்கிய  வழக்காகிய
இவற்றை மிகப் பிற்காலத்துத் தமிழினின்று திரிந்தெழுந்த மலையாளத்தொடு
ஒப்பிட்டும் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறே தொல்காப்பியச் சூத்திரங்கள்
பலவற்றிற்கு ஆசிரியர்  கருத்தைத்  திரித்து  வடமொழிச்  சார்பாக  இவர்
விளக்கங்  கூறியுள்ளார். அம்முரண்பாடுகளை  இக்காண்டிகை  உரையொடு
நோக்கி  மாணாக்கர்  உண்மையுணர்வாராக.  மற்று  இப்புணர்மொழிகளை
நோக்கின்,  இவை  அஃதன்று  என  முற்றாயும்,  அதுவே அன்றியும் என
எச்சமாயும், சங்க இலக்கியங்களுள் பயின்று வருதலைக் காணலாம். எனவே
இச்சொற்கள் வினாவிடை முறையில் அதுவா? அன்று  (அது- ஆ- அன்று)
என நின்று அதா+அன்று=அதாஅன்று எனப்  புணர்ந்துள்ளமை  யறியலாம்.
அன்றி என்னும் எச்சம்  அன்று   எனத்  திரியும்  என்பது  விதியாகலின்
எச்சமாக  நின்று  புணர்ந்த  செய்யுள்  முடிபு  எனக்கோடலே  தக்கதாம்.
அதனானன்றே ‘‘செய்யுள் மருங்கின்  உரித்தென மொழிப’’  என வழிநூல்
வாய்பாடுபட ஆசிரியர் ஓதுவாராயினார்.