சூ. 26 :

அவற்றுள்

ணனஃகான் முன்னர்க்

கசஞப மயவ அவ் ஏழும் உரிய

(26)
 

க-து:

ணனக்களின்  முன்னர்க்  கசப  என்னும்  வல்லெழுத்தும்  ஞம
என்னும்   மெல்லெழுத்தும்   யவ  என்னும்  இடையெழுத்தும்
மயங்குமென்கின்றது.
 

பொருள்:மேற்கூறப்பெற்ற  ஆறனுள்   ணகரனகரப்புள்ளிகளின்  முன்
மேற்கூறிய டகரறகரங்களேயன்றி  ஒவ்வொன்றின்  முன்னரும்  கசஞபமயவ
என்னும் ஏழு (உயிர்) மெய்யெழுத்துக்களும் தனித்தனியே வந்து அவற்றின்
ஓசையொடு மயங்கற்குரியவாம்.
 

எ-டு:   வண்டு-வெண்சாந்து, வெண்ஞாண்,   நண்பன்,   உண்மை,
மண்யாப்பு-கண்விழி  எனவும்,  புன்கம்-நன்செய்,  வின்ஞாண்,   அன்பன்,
நன்மை, மென்யாழ், பொன்வளை எனவும்  வரும். இவற்றுள்  வெண்சாந்து
என்றாற்போல   இருசொல்லாக      உள்ளவை     தொகைமொழிகளாம்.
முரண்டேய்ந்தது  - மன்னன்றேறினான்  -  இறைவன்   செயல்    எனப்
புணர்மொழியுள்ளும் கண்டுகொள்க.