பொருள் : சுட்டெழுத்தினை முதலாக உடைய உகர ஈற்றுச் சுட்டுப்பெயர் இறுதி, உருபு புணர்ச்சிக்கண் கூறியாங்குப் புணரும். ஆண்டு வலிமுதலாய உருபுகளுக்கு ஓதிய வல்லெழுத்திலக்கணமாகிய ஒற்றுமிகுதல் போல ஈண்டு ஒற்று இடையே மிகா. கசதப என நான்காதலின் மிகா என்றார். என்றது; உருபுகளுக்கு ஓதிய அன்சாரியை பெறும்; வல்லெழுத்துமிகா என்றவாறாம்.
எ. டு: அதன்கோடு; இதன்கோடு; உதன்கோடு, செதிள், தோல், பூ எனவரும். ‘‘உதுக்காண்’’ என்பது இரண்டாம் வேற்றுமைத் திரிபாகலான் சாரியை பெறாது வல்லெழுத்துமிக்குப் புணர்ந்தது என்க.