சூ. 267 :

குற்றெழுத் திம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்

நிற்றல் வேண்டும் உகரக் கிளவி

(65)
 

க-து:

ஊகார ஈற்று ஒருசார் சொற்களுக்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :குற்றெழுத்தைச்   சார்ந்து  ஈறாக  நிற்கும்  சொல்லிற்கும், ஊகார  ஈற்று  ஓரெழுத்தொரு  மொழிக்கும் ஓர் உகர எழுத்துத் தோன்றி
நிற்கும்.
 

எ. டு:உடூஉக்குறை,  செய்கை,  தலை,  புறம் எனவும் (உடூ-விண்மீன்)
தூஉக்குறை, செய்கை, கதவு, பொலிவு எனவும் வரும். (தூ - வலிமை)
 

விண்மீனின்  பெயராகிய   உடூ  என்பது  உடு   என  உகர  ஈறாய்
வழங்குகின்றது.  ஆடூ,  மகடூ  என்பவை குற்றெழுத்தின்பின் வந்த ஊகார
ஈறு அல்லவாயினும், ஒப்புமையாக்கத்தான் உகரம் பெற்று  ஆடூஉ, மகடூஉ
என வழங்கப்படுகின்றன. வழங்கினும் அவற்றை உகர ஈறாகக் கொள்ளாமல் ஊகார ஈறாகவே கொள்க.