ஞநமவ என்பவற்றின்முன் யகரம் மயங்குமாறு கூறுகின்றது.
பொருள்:ஞநம என்னும் மெல்லெழுத்தின் முன்னும் வ என்னும் இடையெழுத்தின் முன்னும் யகர (உயிர்) மெய்வந்து அவற்றின் ஓசையொடு மயங்குதல் பொருளுடையதேயாம்.
மெய்யென்றது பொருளை. ஈண்டுப் பொருளாவது மயக்க இலக்கணமாம். இம்மயக்கம் தனிமொழிக்கண் நிகழாவாதலின் அதுகருதி ஐயுறற்க என்பார் ‘‘மெய்பெற்றன்றே’’ என்றார். இதனானும் மயக்க இலக்கணம் தனிமொழி தொடர்மொழி என்னும் நியதியின்றி வரும் என்பது புலப்படும்.
எ-டு:உரிஞ்யானை - பொருந்யாக்கை - திரும்யாடு - தெவ்யாழ் எனத் தொகைமொழிக்கண்ணும், உரிஞ்யாது, வெரிந்யாது, சுரம்யாது, தெவ்யாது எனப் புணர்மொழிக்கண்ணும் வரும்.