சூ. 272 :

எகர ஒகரம் பெயர்க்கீ றாகா

முன்னிலை மொழிய என்மனார் புலவர்

தேற்றமும் சிறப்பும் அல்வழி யான 

(70)
 

க-து :
 

எகர ஒகர ஈறுகள் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :எகரமும்   ஒகரமும்   முறையே  தேற்றமும் சிறப்புமாகிய
பொருள்  பற்றி  வருதலல்லாவிடத்துப்  பெயர்ச் சொற்களுக்கு ஈறாகவாரா. வினைச்சொல்லுள்  ஏவலாகிய  முன்னிலை  மொழியினவாகிக்  கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்று கூறுவர் புலவர்.
 

இச்சூத்திரம், வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்னும் உத்திக்கும், ஞாபகங்கூறல் என்னும் உத்திக்கும் இனமாம். அஃதாவது, எஎன வருமுயிர் மெய்யீ றாகாது (மொழி-38) ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (மொழி-39) தெளிவின்  ஏயும்   சிறப்பின்   ஓவும்  அளபின்  எடுத்த  இசைய என்ப (இடை-13) என்பவற்றான் அவை ஏகார  ஓகாரங்களின்  அளபெடையாய்ப் பெயர்க்கு ஈறாவனவன்றித் தாமே ஈறாகா வாரா என்பதும்,
 

உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பாகுநவும் உறழ்பா குநவும்என்று

ஆயீ ரியல வல்லெழுத்து வரினே 

(தொகை-9)
 

எனத்  தொகைமரபினுள் கூறி ஈண்டு ‘‘முன்னிலை மொழிய’’ என்றதனான்
அவை முன்னிலை ஏவலாக வரும் ஏகார ஓகாரங்களின் அளபெடை ஈறாகி
நின்று, வல்லெழுத்தொடு புணருமிடத்து உறழ்ந்து புணரும் என்பதும்
 

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்

மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகாஅ 

 

என  அடுத்துக் கூறுவதனான், அவை  உறழ்தலாகிய பொதுவிதியின் நீங்கி
இயல்பாகப்  புணருமென்பதும், முன்னிலை  வினையாயின்  மிகுமென்பதும்
பெறப்படுதலான் என்க.
 

விதி   ஒத்தலின்  ஒன்றென  முடித்தல்  என்பதனான் ஒகரமும் உடன்
ஓதப்பட்டதென அறிக.
 

எ. டு:ஏஎக்கொற்றா!  சாத்தா!  தேவா!   பூதா!  எனவும்  (ஏஎ-ஏவுக)
ஓஒக்கொற்றா! சாத்தா! தேவா! பூதா! எனவும் (ஓஒ-நீங்குக) வரும்.
 

இதனானும்  இடைச்சொற்கள் பெயர் வினைகளைச் சார்ந்து பெயராயும்
தொழிலாயும் நின்றுபுணருமென்பது தெளிவாகும்.
 

இவற்றை இடைச்சொற்புணர்ச்சி கூறுவதாக உரையாசிரியன்மார் கூறுவது
ஆசிரியர்  கருத்திற்கு  முரணாகும். மற்றும் இச்சூத்திரம்  எகரஒகரங்களின் இயல்புணர்த்துவதாக    அவர்   கூறுவர்.   அது   கருத்தாயின்    இது மொழிமரபின்கண் இருத்தல் வேண்டுமென்க.