சூ. 28 :

அவற்றுள்

மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் 

(28)
 

க-து:

மகரத்தின்முன் வகரமும் மயங்கும் என்கின்றது.
 

பொருள்:  மேற்கூறியவற்றுள்  மகரப்புள்ளியின்முன்    யகரமேயன்றி
வகர (உயிர்) மெய்யும் வந்து மயங்கும்.
 

வகரம் வந்து மயங்குங்கால்  மகரம்  தன்  ஒலிகுன்றி  உட்பெறுபுள்ளி
மகரமாகும் என்பதனை ‘‘வகார மியையின்  மகாரம் குறுகும்’’ என்பதனான்
அறிக.  இதனானும்   மயக்கம்    என்பது    தனி  எழுத்தொலி  பற்றிய
ஆராய்ச்சியே என்பது புலனாகும்.
 

எ-டு :  திரும்வாழ்வு (திரும்பும்  வாழ்வு) என்பது  வினைத்தொகை
மொழி.  தரும்வளவன்  -  நிலம்  வலிது  எனவரும். இவை புணர்மொழி.
இம்மயக்கமும் தனிமொழிக்கண் நிகழாதென அறிக.
 

இந்நான்கு சூத்திரத்தானும் முறையே  ஙகரத்தின்முன்  ககரம்  ஒன்றும், ஞகரத்தின்முன் சகரயகரங்களாகிய இரண்டும், ணகரத்தின்முன்டகசஞபமயவ
என்னும் எட்டும், நகரத்தின்முன்  தகரயகரமாகிய இரண்டும், மகரத்தின்முன்
பகரம்,  யகரம்,  வகரமாகிய  மூன்றும்,  னகரத்தின்  முன்   றகசஞபமயவ
என்னும்  எட்டும்  மொழிக்கண் இணைந்து  நிற்கும்  என்பதும்  பிறவந்து
நில்லா என்பதும் புலப்படுத்தப்பட்டதென்க.