|
சூ. 284 : | பனையின் முன்னர் அட்டுவரு காலை | | நிலையின் றாகும் ஐயென் உயிரே | | ஆகாரம் வருதல் ஆவயி னான | (82) | க-து : | பனை என்னும் சொல், வருமொழி அட்டு என்பதனொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் :பனை என்னும் மரப்பெயர்ச் சொல்லின் முன்னர் அட்டு என்பது வருமிடத்து, இறுதி ஐகாரம் நிலைபெறுதல் இன்றாகும்; அவ்விடத்து ஓர் ஆகாரம் தோன்றி வருதலாகும். | எ. டு:பனை + அட்டு (பன்+ஆ+அட்டு) பனாஅட்டு எனவரும். ஐகாரம் கெடும் என்னாமல் நிலையின்றாகும் என்றதனான் பனையட்டு எனப் பொதுவிதி பெற்று வருதலும் கொள்க. | இனி ‘‘ஆவயினான’’ என்பதனான் ஓராநயம், விச்சாவாதி, கேட்டாமூலம், பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங்கொள்க என்பார் நச்சினார்க்கினியர். | இவற்றுள் ஓரா, விச்சா என்பவை இயல்பீறாகவே கொள்ளப்படுதலானும், கேட்டா மூலம் என்பது சான்றோர் வழக்கன்றாதலானும் அவற்றை ஈண்டு அடக்குதல் வேண்டாவாம். பாறாங்கல், கூழாங்கல் என்பவை பண்புபற்றி, ஒருசொற் புணர்ச்சியாய் நிற்பவையாகலான் அவற்றை நிலைமொழி வருமொழி செய்து புணர்த்தல் வேண்டாவாம். |
|