சூ. 285 :

கொடிமுன் வரினே ஐஅவண் நிற்பக்

கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி 

(83)
 

க-து :
 

பனை  என்பதன்முன்  கொடி என்னும் சொல்வரின், எய்தியது
விலக்கிப் பொதுவிதி பெறும் என்கின்றது.
 

பொருள் :(அதிகாரத்தால்  நின்ற)  பனை  என்னும்  சொல்லின்முன்
கொடி என்னும் சொல்வரின், ஐகாரம் கெடாது  நிற்ப வல்லெழுத்து மிகுதல்
நீக்கும் நிலைமைத்தன்று.
 

எ. டு:பனைக்கொடி  எனவரும்.  பனையை  எழுதிய  கொடி என்பது
பொருள்.   பனைமரத்திற்குக்   கொடியின்மையின்   இவ்விதி    விதந்து
கூறப்பட்டது.
 

‘‘அவண்நிற்ப’’ என்றதனான் பனையின்முன் திரள் என்னும் சொல்வரின்
பனைத்திரள் - பனந்திரள் என உறழ்ந்து வருதல்கொள்க. மெலிமிகும் என
ஆசிரியர் கூறாமையின் பனைந்திரள் எனக்காட்டுவது பொருந்தாதென்க.