அங்ஙனமாயின், அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எங்ஙனம் எனச் சுட்டினையும் எகரத்தையும் அடுத்து இச்சொல் வருதலின் அவர் கூறுவன பிழையாமாறு என்னை எனின்? அங்ஙனம் முதலிய நான்கு சொற்களும் அங்கு, இங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, ஆண்டை, ஈண்டை, அன்றி, இன்றி, அதோளி, இதோளி என்பவற்றைப் போல, இடைச்சொற்களடியாகப் பிறந்த பிரிப்பப்பிரியா ஒருமொழியாய தனிச்சொல்லாகும். அவை சுட்டெழுத்துக்களையும் எகரத்தையும் முதலாகக்கொண்டு இடமும் தன்மையுமாகிய பொருள் குறித்து வருமென்க. ஆதலின் நிலைமொழி வருமொழியாக இவற்றைப் பிரித்தல் கூடாதென அறிக. இனி ஆங்ஙனம், ஈங்ஙனம் என நெடிலுக்குப் பின்வரும் மெல்லொற்று இரட்டுதல் தமிழ் இலக்கணத்திற்கு ஒவ்வாது என்பர் சில ஆய்வாளர். மெல்லெழுத்து ஆறனுள் ஙகரம் ஒழிந்த ஐந்தும் மொழியிறுதியில் வருவன. அவற்றுள் ஞந ஒழிந்த, மணன மூன்றும் நெடிலையும் குறிலையும் அடுத்துத் தனிமொழியாக நின்று வருமொழியொடு புணர்தற்குரியவை. ஙகரம் மொழியிறுதிக்கண்வாராது. அம்முறையான் அது வல்லெழுத்தை ஒத்ததாக உள்ளமையறியலாம். இரட்டுதல் என்பது ஈரெழுத்தொருமொழிக்கண் குறிலைச் சார்ந்து நிற்கும் ஒற்று உயிர் முதன்மொழி வருங்கால் எய்தும் புணர்மொழிச் செய்கையாகும். அங்ஙனம் ஆங்ஙனம் என்பவை இடைச் சொல்லடியாகப் பிறந்த தனிச் சொற்களாகும். அவை நிலைமொழி வருமொழியாக அமைந்து புணர்ந்த புணர் மொழிகளல்ல. வல்லொற்றை இடையே கொண்ட சொற்கள் குற்றம், கூற்றம், வட்டம், வாட்டம், பக்கம், பாக்கம் என வருமாறு போல அங்ஙனம், ஆங்ஙனம் என வந்தனவாதலின் அவர் கருத்து நிரம்பாமையறியலாம். அதனானன்றே ஆசிரியர் சுட்டுவினாக்களை முதலாகக் கொண்டுவரும் அவன், இவன், உவன், யாவன் முதலியவற்றை ஒருசொல்லாக வைத்துப் பெயரியலுட் கூறுவராயினார் என்பது. |