சூ. 295 :

ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர் 

அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்

வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே

அவ்விரு ஈற்றும் உகரம் வருதல்

செவ்வி தென்ப சிறந்திசி னோரே

(93)
 

க-து :

ஒளகார ஈற்றுப் பெயர் இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஒளகார   ஈற்றுப்  பெயர்கள்,  தம்முன்னர்  அல்வழியின்
கண்ணும் வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக்  கண்ணும் வல்லெழுத்து வரின்,
மிக்குப்புணர்தல் நீக்கும் நிலையின்று. அவ் இருகூற்றுச் சொற்கண்ணும் ஓர்
உகரம் வருதல் செம்மையானது எனக் கூறுவர் இலக்கணத்திற் சிறந்தோர்.
 

‘கவவொடு     இயையின்   ஒளவு   மாகும்’   (மொழி - 37)   என
வரையறுக்கப்பெற்றமையான் ‘‘அவ்விரு ஈற்றும்’’ எனக்கூறினார் வழுவாமை
பற்றி என்க. அவ்விரு என்பது அல்வழி, வேற்றுமைகளை எனலுமாம்.
 

எ.டு :அல்வழிக்கண் கௌவுக்கடிது; வௌவுக்கடிது, சிறிது, தீது, பெரிது
எனவரும்.  வேற்றுமைக்கண்   கௌவுக்கடுமை, வௌவுக்கடுமை,  சிறுமை,
தீமை,  பெருமை  எனவரும்.   உடம்படுமெய்   பெறாமல்  கௌஉக்கடிது,
வௌஉக்கடிது   என   வருதலும்   ஒக்கும்.  ‘‘செவ்விது’’   என்றதனான்
உகரப்பேறு இயல்புகணத்து வரினும் கொள்க.
 

எ.டு :கௌவுஞெமிர்ந்தது, கௌஉஞெமிர்ச்சி எனவரும்.
 

உயிர் மயங்கியல் முற்றியது