8. புள்ளிமயங்கியல்
 

புள்ளி   எழுத்துக்கள்  பெயர்  முதலிய  நால்வகைச்   சொற்களிலும்
இறுதியாக     நின்று     இருவழியும்     நாற்கணத்தொடும்   புணரும்
இயல்புணர்த்தலின்     இவ்வோத்துப்     புள்ளிமயங்கியல்     என்னும்
பெயர்த்தாயிற்று.
 

“மெய்யே   உயிரென்   றாயீ   ரியல’’   எனப்பட்டவற்றுள் மெய்யீறு
புணருங்கால்   அஃது  ஒலிப்புடையதாகிப்  புணரும்   என்பதை ‘‘மெய்யீ
றெல்லாம்    புள்ளியொடு     நிலையல்’’   என    உணர்த்தினமையின்,
மெய்ம்மயங்கியல் என்னாது புள்ளிமயங்கியல் என்றார்.
 

‘‘உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ (புண-5) என்னும் சூத்திரத்துள்
நிறுத்தமுறையாற்    கூறுதலின்   இவ்வியல்     உயிர்   மயங்கியலொடு
இயைபுடைத்தாயிற்று.
 

புள்ளியீற்றின்முன் உயிர்முதன் மொழிவரின் எய்தும் இலக்கணம் பற்றிப்
பொதுவகையான்   புணரியலுள்ளும்  (புண - 35)  தொகை  மரபினுள்ளும்
(தொகை - 18)   பெறப்படுதலின்  ஈண்டுப்  புள்ளியீறு நின்று உயிர்மெய்ம்
முதன்மொழிகளொடு புணருமாறு பற்றி முதற்கண் கூறத் தொடங்குகின்றார்.
 

சூ. 296 :

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே

உகரம் வருதல் ஆவயி னான 

(1)
 

க-து : 

ஞகார ஈறு இருவழியும் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:ஞகாரத்தை  ஈறாக  உடைய  முதனிலைத்  தொழிற்பெயர்,
அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக் கண்ணும்,
தன்முன்னர் வல்லெழுத்து வந்து புணரின் அவ்வெழுத்துமிகும், அவ்விடத்து
நிலைமொழிக்கண் ஓர் உகரம் வருதலைச் செய்யும்.
 

எ. டு:உரிஞுக்கடிது,  சிறிது,  தீது,  பெரிது எனவரும். இவை அல்வழி,
உரிஞுக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். இவை வேற்றுமை.