சூ. 30 :

மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்

தம்முன் தாம்வரூஉம் ரழஅலங் கடையே 

(30)
 

க-து:

ஒத்தஎழுத்துக்கள் மயங்குமாறு கூறுகின்றது.
 

பொருள்:ரழ  என்னும்  இரண்டுமல்லாத  ஏனைய  பதினாறு  புள்ளி
எழுத்துக்களும் தத்தமக்கு முன்னர்த் தாம் வந்து தமது ஓசை திண்ணிதாகப்
புலப்பட மயங்கும் என்றவாறு.
 

ஒத்தஎழுத்துக்கள் இணைந்து வருங்கால்  நின்ற  எழுத்தின்  முன்வரும்
எழுத்தின் ஓசை திண்ணிதாய் அழுத்தம்  பெறுதலின் அதுவும்  ஓராற்றான்
மயக்கமே  என்பதனை  அறிவித்தற்கு  ‘‘மெய்ந்நிலை’’   சுட்டின் தம்முன்
தாம்வரூஉம்   என்றார்.   மெய்ந்நிலை =  பொருள்நிலை.   பொருளாவது
ஈண்டுஓசை. சுட்டுதல் = கருதுதல். அஃதாவது  ஒலியழுத்தத்தைக்  கருதின்
என்றவாறு.
 

இதுகாறும் ஒரு புள்ளியெழுத்தொடு  அதுவல்லாத  பிறமெய்கள்  வந்து
மயங்கும்  மயக்கமே  பற்றிக்  கூறிவந்தமையான்  தம்முன்  தாம்  வருதல்
மயக்கமாகாதோ  என்னும்  ஐயம்  நீங்க  அதுவும்  ஓராற்றான்  மயக்கமே
என இந்நூற்பாவாற்றெளிவு படுத்தினார் என அறிக. மயக்கம் என்பது வலி,
மெலி, இடை என மெய்களுக்கு ஓதப்பெற்ற ஒலிகள் தொடருங்கால் மயங்கி
வருதலைப்  புலப்படுத்தல்.  அவ்வாற்றான் அவை  இணைந்து  தொடரும்
என்பதைக்  கூறுதலும்  (மெய்ம்மயக்க)  இலக்கணக்  கோட்பாடு   என்பது
இச்சூத்திரத்தானும் புலப்படும். இதனான் ரழ  அல்லாத ஏனைய பதினாறும்
தம்முன்தாம் இணைந்து மொழிக்கண் வரும் என்பதும் உணர்த்தப்பட்டது.
 

எ-டு:மக்கள்,  இங்ஙனம்,  நொச்சி,  மஞ்ஞை,  வட்டம்,  அண்ணல்,
தித்தன், வெந்நீர், கப்பல், வெம்மை, வெய்யர், மல்லல்,  தெவ்வர், வள்ளல்,
கொற்றன், கன்னல் எனவரும்.
 

இங்ஙனம்  வந்து   இணைந்த   மெய்கள்   திண்ணிதாய்  ஒலிப்பதை
மகன்-மக்கள்   என்னும்   சொற்கண்   உள்ள   ககரங்களை    ஒலித்து
வேறுபாட்டினை உணர்க. ரழக்கள் வளைநா அண்ண  இடையிற்  பிறக்கும்
வருடொலிகளாதலான் அவை  ஊன்றுதலின்று,  அதனான் அவை தம்முன்
தாம்வாராவாயின.
 

இனி,  உரையாசிரியன்மார்  இச்சூத்திரங்களான்   கூறப்பட்ட  விதிகள்
மொழியின்கண் எழுத்துக்கள் இணைந்து  வருமிடத்து எந்த மெய்யின் பின்
எந்த மெய்வரும் என வரையறை கூற வந்தனவாகக் கொண்டு, வேற்றுநிலை
மெய்ம்மயக்கம்   உடனிலை   மயக்கம்   எனத்தாமே   வகுத்துக்கொண்டு
விளக்கங்கூறினர்.   நச்சினார்க்கினியர்  உரையாசிரியரொடு   முரண்பட்டுக்
கூறுவர். மொழிக்கண் எழுத்துக்கள்  நிற்குமாற்றை ஆசிரியர் மொழிமரபின
கண்ணே, தெளிவாகக் கூறுதலை ஓராராய் அவர் கூறியனவே  வழக்காறாய்
அமைந்து, தமிழ்  எழுத்துக்களின்  ஒலியமைப்பின்  நுட்ப இலக்கணத்தைப்
பற்றியவை இவையென அறிய இயலாமற் செய்துவிட்டது.
 

இதுகாறும் கூறியவாற்றான் வல்லெழுத்து மெல்லெழுத்து  இடையெழுத்து
எனக்கூறுபவாயினும் அம்மூவாறும்  வழங்குமிடத்துப்   புள்ளியாக  நிற்கும்
மெய்யின் முன் உயிர்மெய்யாகவரும்  மெய்  ஒலிமாற்றம்   எய்துமென்றும்,
ஒலியழுத்தம்    பெறுமென்றும்,    எழுத்தொலி    பற்றிய  இலக்கணமே
கூறப்பட்டதென்பது தெளிவாகும்.