சூ. 303 :ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை(8)
 

க-து:

ஆண் பெண் என்னும் பெயர்கட்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்:  ஆண், பெண்  என்னும்  விரவுப்  பெயர்கள்,  அஃறிணை
விரவுப் பெயர்க்குக் கூறிய இலக்கணத்தைப் பெறும்.
 

என்றது : ‘‘அஃறிணை  விரவுப்பெயர் இயல்புமா ருளவே’’ (தொகை-13)
என்னும்  விதிப்படி  இயல்பாகப் புணரும் என்றவாறு. அஃறிணை இயற்கை
என்றதனான்   இவை  உயர்திணைப்  பொருளவாய்   நிற்பவை  என்பது
புலப்படும்.
 

எ. டு:  ஆண்கல்வி - பெண்கல்வி, சால்பு,  திட்பம், பண்பு எனவரும்.
ஆண்கை; பெண்கை, செவி, தலை, புறம் எனக் காட்டின், கை முதலியவை
இருதிணைக்கும் பொதுவானவை யாதலின் அவை அப்பொதுச் சூத்திரத்துள்
அடங்குமென்க.    ஆண்மை,    பெண்மை     என்னும்     பண்புகள்
உயர்திணைக்குரியவை என்பதைக்  ‘குடிமை  ஆண்மை  இளமை மூப்பே’
(கிளவி-57) என்னும் சூத்திரத்தானறிக.
 

இவற்றின் அல்வழி முடிபு ‘‘மொழிமுத லாகும்’’ (தொகை-5) என்பதனுள்
அடங்கும். எ.டு: ஆண்கற்றான், பெண்கற்றாள் எனவரும். பிறவும் அன்ன.