சூ. 306 :தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல(11)
 

க-து:

ணகர ஈற்றுத் தொழிற் பெயர்கட்கு  மாட்டேற்றுவகையான் விதி
கூறுகின்றது.
 

பொருள் :ணகார  ஈற்று  முதனிலைத் தொழிற் பெயரெல்லாம் ஞகார
ஈற்றுத் தொழிற் பெயர் போல இருவழியும் புணரும்.
 

என்றது; உகரம் பெற்று  வன்கணம் வரின்  மிக்கும், ஏனைக் கணங்கள்
வரின் இயல்பாயும் புணருமென்றவாறு.
 

எ.டு :மண்ணுக்கடிது,  சிறிது, தீது, பெரிது  எனவும் மண்ணு ஞான்றது,
நீண்டது, வலிது, இனிது  எனவும் வரும். இவை அல்வழி. மண்ணுக்கடுமை,
சிறுமை,  தீமை,  பெருமை, நன்மை,  வன்மை, அருமை எனவரும். இவை
வேற்றுமை (மண்ணுதல்-கழுவுதல்)
 

‘உரிஞ்’ என்றாற்போல ஒரே ஒரு சொல்லன்றி மண், பண், உண், எண்,
பேண், காண் என ணகர ஈற்றுத் தொழிற் சொற்கள் பலவாக  உளஆதலின்
எல்லாம் என்றார். ‘‘ஒத்த எண்ணு முன்வரு காலை’’ (சூ.317) என ஆசிரியர்
உடம்பொடு   புணர்த்துக்   கூறியுள்ளமையான்   தொழிற்   பெயரல்லாத
பொருட்பெயரும்   சிறுபான்மை   உகரம்  பெற்றுவருதல்  கொள்க. எ.டு:
வெண்ணுக்கரை, பண்ணுப் பெயர்த்து, மண்ணுவீடு எனவரும்.