சூ. 307 :கிளைப்பெய ரெல்லாம் கொளத்திரி பிலவே(12)
 

க-து :

ணகார ஈற்றுக் கிளைப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :தொழில்  முதலிய   காரணங்களாற்  பிறந்த  ணகர ஈற்றுக்
கிளைப் (சாதி) பெயர்கள் எல்லாம்  மேற்கூறிய திரிபு கொள்ளுதல் இல்லை.
அவை இயல்பாகப் புணரும். திரிபு கொளஇல என மாறிக் கூட்டிப் பொருள்
கொள்க.
 

எ. டு:உமண்குடி, சேரி, தோட்டம், பாடி எனவரும்.
 

பாண்குடி, வேளாண்குடி  எனக்  கிளைப்பெயர் பலவாக உள்ளமையான்
எல்லாம்   பாணச்சேரி    என்றார்.   ‘கொளத்திரிபிலவே’   என்றதனான்
எனச்சாரியை பெறுதலும் கொள்க.
 

உரையாசிரியன்மார்  இச்சூத்திரத்துமிகையான்  மண்ணப்பந்தம், எண்ண
நோலை  எனப்பிற  பெயர்கள்  அகரச்சாரியை  பெறுதலையும் கவண்கால்,
பரண்கால்  என  வேற்றுமைக்கண்  திரியாது  வருதலையும் உருபு ணகரம்
திரிதலையும் அடக்குவர்.
 

ஆசிரியர்  கிளைப்பெயரெல்லாம்  என   விதந்து   கூறியுள்ளமையான்
அகரச்சாரியை     பெறுதலையும்   வேற்றுமைக்கண்    இயல்பாதலையும்
புறனடையாற்   கொள்ளல்   நேரிதாம்.  உருபு  திரிதல் எடுத்தோத்தானே
அமையும் எனமேல் விளக்கப்பட்டது.