பொருள் :பண்பை உணர்த்தாமல் தொழிலை உணர்த்தி வரும் முரண் என்னும் தொழிற்பெயர் பொதுவிதியாக முன்னர்க் கூறிய இலக்கணத்தான் நிலைபெறும். என்றது; அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் டகரமாகத் திரிந்தும் நிற்கும் என்றவாறு.
எ.டு :முரண் கடிது, சிறிது, தீது, பெரிது என அல்வழியிலும் முரட்கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வேற்றுமையிலும் வரும். தொழிற்பெயராயினும் இச்சொல் உகரம் பெறாது வரும் என்பது கருத்து.
முரண் என்னும் சொல், இருளும் ஒளியும் தம்முள் முரணாகும்: என்புழிப்பண்பாயும் மன்னர் தம்முள் முரணிப் போரிட்டனர்: என்புழித் தொழிலாயும் நின்றவாறு காண்க. இதனைத் ‘‘தொழிற்பெய ரெல்லாம்’’ (சூ. 306) என்பதன் பின்வையாது ஈண்டு வைத்தார். முரண் கடுமை எனத் திரியாத வழி நிலைமொழி பண்புப்பெயர் எனவும் முரட்கடுமை எனத் திரிந்த வழி நிலைமொழி தொழிற் பெயரெனவும் தெரிந்துகோடற் கொள்க.