சூ. 31 :அ இ உஅம் மூன்றும் சுட்டு

(31)
 

க-து:

உயிர்க்குற்றெழுத்துள் மூன்றற்குச் சிறப்புக் குறியீடு கூறுகின்றது.
 

பொருள்:அஇஉ   என்னும்     அம்மூன்று     உயிரெழுத்துக்களும்
சுட்டுதற்குரியவாதலின் சுட்டு என்னும் பெயரான் வழங்கப்படும்.
 

குறியீடு  வழங்குதற்   பயத்ததாகலின்   எழுத்துக்கட்கு  உயிர்என்றும்
புள்ளிஎன்றும்  பெயரிட்டுப்,  பின்னர்க்  குறில்-நெடில்,  வலி-மெலி-இடை
என்றும் குறியீடு செய்து வழங்குதல் போலப்  பின்னர் ஆளுதற் பொருட்டு
ஈண்டுக் குறியீடு செய்தார் என்க.
 

எ-டு :

“வஃகான் மெய்கெடச் சுட்டுதல் ஐமுன்” (புண-29)

“சுட்டுமுத லாகிய இகர இறுதியும்” (தொகை-17

“சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி” (உருபு-4)

“சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்” (விளி-31)
 

எனப் பின்னர் வழங்குதல் காண்க.
 

எகரம் ‘‘எவன்’’   என்னும்     வினாவினைக்       குறிப்புச்சொற்கு
உறுப்பாகவும்     எஞ்சாப்     பொருள்தரும்      இடைச்சொல்லாகவும்
சிறுபான்மை  வினாப்பெயரின்   உறுப்பாகவும்    வருதலன்றித்   தனித்து
வாராமையான்  அதனைக்குறியீடு  செய்யாராயினர்.  ஆசிரியர்  ‘‘சுட்டுமுத
லாகிய’’ என்றாற்போல  வினா  முதலாகிய என வழங்காமல்  ‘‘எகர முதல்
வினாவின்’’   எனக்கூறுதலையும்    எகரமுதல்    வினா   என்றாற்போல
அகரமுதற்சுட்டு  என   வழங்காமையும்   காண்க.    ‘‘எவன்’’   என்பது
வினைக்குறிப்பு.  எப்பொருள்   என்பது   எஞ்சாமைபொருட்டு.  எதோளி
என்பது எங்கு என்னும் இடப்பொருட்டு.
 

இனி   எவன்,   எவள்,  எவர்,  எது,  எவை  என  இடைக்காலத்துத்
தோன்றிய வழக்கு யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும்  வினாப்
பெயர்களின் திரிபாகும்.  எங்ஙனம்  என்பது  யாங்ஙனம்  என்பதன் திரிபு.
எக்கடல்,  எந்நாடு,  எவ்வீடு,  எவ்வூர்  என்றாற்போல வரும் இடைக்கால
வழக்கினைக் “கிளந்த வல்ல  வேறுபிற தோன்றினும்” (இடை. 48) என்னும்
புறனடையாற்கொள்க.