சூ. 310 :

மகர இறுதி வேற்றுமை யாயின்

துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே 

(15)
 

க-து : 

மகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு பொதுவிதி கூறுகின்றது.
 

பொருள் : மகர  ஒற்றினை  ஈறாக   உடைய   பெயர்,  வேற்றுமைப்
பொருட்  புணர்ச்சியாயின், மகரம்  முற்றக்கெடும்.  அவ்வழி  வல்லெழுத்து
வரின்  மிகும்.  ஞாபகத்தான் ஏனைக்கணம் வரின் மகரம்கெட்ட நிலையில்
விதியீறாக நின்றுபுணரும் என்க.
 

துவரக்கெடும் என்றும், கெட்டவழி விதியீறாக நிற்ப, வரும் வல்லெழுத்து
மிகும் என்றும் பொருள் கொள்க.
 

எ.டு :மரக்கோடு,   மரச்செதிள்,  மரத்தோல்,  மரப்பூ  என   வரும்.
தொண்டகப்பறை,          முண்டகக்கோடு        எனவும்     ஒட்டிக்
கொள்க. ஏனைக்கணத்து; மரநார், மரவேலி, மரவுரல் எனவரும்.
 

‘வல்லெழுத்து மிகுமே’ என்றதனான் ஏனையெழுத்துக்கள் மிகா என்பது
‘‘எடுத்த  மொழிஇனம்  செப்பலும்  உரித்தே’’ (கிளவி - 61)  என்பதனான்
அமைதலை  ஓராமல்  இவற்றைத்  ‘துவர’  என்னும்  மிகையாற் கொள்வர்
உரையாசிரியன்மார். துவர  என்பது  மகரஈறு.  யாண்டும் கெட்டே நிற்கும்
என்பதை வற்புறுத்தி நிற்பதாகலின் அஃது மிகையாகாமையும் உணர்க.