உரையாசிரியன்மார் அடுத்துவரும் நூற்பாவின்கண் உள்ள ‘‘வழக்கத்தான’’ என்பதனான் குளாஅம்பல் என ஆகாரத்தை அகரமாக்குக என்பர். அங்ஙனம் ஆக்கிக் கோடற்குக் காரணம் கூறினாரில்லை. மற்று, வருமொழி முற்கூறியதனான் கோணா கோணம், கோணாவட்டம் எனப் பிறவும் வேறுபட வருவனவற்றை எல்லாம் கொள்க என்பார். அவை கோணத்துள் கோணம், கோணத்துள் வட்டம் எனப் பொருள் தந்து நிற்றலின் மரூஉ முடிபாகக் கொண்டு புறனடையுள் அடக்குதலே நேரிதென்க. |